திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் வசித்து வருபவர் கர்ணன் (30). இவர், தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கோரி அப்பெண்ணின் விட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த கர்ணன், செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து தகவலறிந்த சிப்காட் காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் டவர் மீது ஏறிய போது, அருகில் வந்தால் கீழே குதித்து விடுவேன் என்று அந்த இளைஞர் மிரட்டல் விடுத்தார். பின்னர், கர்ணனுடன் அவரது குடும்பத்தினர் செல்போனில் பேசி சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் சமாதானம் ஆகவில்லை. அதன் பின்னர் அப்பெண்ணின் தந்தை, தனது மகளை திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன் பின்னரே அந்த இளைஞர் சமாதானம் அடைந்தார்.