திருவள்ளூர் மாவட்டத்தில் உலக பூமி தினத்தையொட்டி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது. இதில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாகவும், அவரது இயற்கை ஆர்வத்தை போற்றும் வகையிலும் விவேக்கின் வயதான 59-ஐ குறிக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் 59 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
விவேக் நினைவாக எஸ்.பியுடன் மரக்கன்றுகளை நட்ட ரம்யா பாண்டியன் - நடிகை ரம்யா பாண்டியன்
திருவள்ளூர்: மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 59 மரக்கன்றுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் நட்டு வைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறும்போது, உலக புவி தினத்தை கொண்டாடும் வகையிலும், திரைப்பட நடிகர் விவேக்கின் நினைவாகவும் அவரது வயதை குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டன. எங்களுடன் இயற்கை ஆர்வலர் ரம்யா பாண்டியன் இணைந்து மரக் கன்றுகளை நட்டு வைத்து மகிழ்ச்சி என்றார்.
இவரைத் தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் கூறுகையில், உலக பூமி தினத்தன்று ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடுவது வழக்கம். இந்த ஆண்டு நடிகர் விவேக் நினைவாக அவரது இயற்கை ஆர்வத்தை போற்றும் வகையில் அவர் என்னுடைய நல்ல நண்பர் என்ற முறையிலும் மரக்கன்றுகளை நான் நட்டுள்ளேன். விவேக்கின் நினைவாக பல மக்கள் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். விவேக் கலை சேவையிலும் இதுபோன்ற இயற்கை ஆர்வத்திலும் என்றும் அழியாமல் அதே புகழுடன் இருப்பார் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.