சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல். இந்த ஏரி 3,300 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்டது. இதில் தற்போது 2,980 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. தொடர் மழையால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து வரக்கூடிய நீரானது ஏரிக்கு 2,000 கனஅடி வந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சென்னை மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 153 கனஅடி நீர் அனுப்பப்பட்டுவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் செங்குன்றத்தில் 54 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு மேலும் ஏரியின் முழுக் கொள்ளளவான 21.20 கனஅடியில் 20 கனஅடியை நீர் எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பைக் கருதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவின்பேரில் பொதுப்பணித் துறை அலுவலர்களால் தற்போது இரண்டு மதகுகள் வழியாக 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புழல் ஏரி உபரி நீர் கால்வாயைச் சுற்றியுள்ள கிராமங்களான வடகரை, கிரான்ட் லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் போன்ற பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
ஏரி உபரிநீர் கால்வாய் ஓரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுவார்கள் எனவும் எந்தவித பாதிப்பும் இன்றி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.