தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே புதியதாக மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
குடியிருப்புப் பகுதிக்கு அருகில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு! - Tasmac Shop in Aarampakkam
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்குள்பட்ட ஆரம்பாக்கத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தமிழ்நாடு எல்லையில் உள்ள தோக்கமூர், ஆந்திர எல்லையான காரூர் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்புப் பகுதிக்கு அருகில் கடையைத் திறப்பதால் மதுப்பிரியர்கள் பெண்களைக் கேலி, கிண்டல் செய்வதுடன் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கும் எனத் தெரிவித்தனர்.
மேலும் எல்லைப் பகுதிக்கு அருகிலேயே மகளிர் விடுதியும் செயல்படுவதால் டாஸ்மாக் கடையை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது எனப் பெண்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
எனினும் டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி பெண்கள் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.