திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழை காரணமாக முக்கிய கோயில் நகரங்களுள் ஒன்றான மாங்காடு பகுதியில், ஓம் சக்தி நகர், காமாட்சி அம்மன் நகர், ஜனனி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அந்த பகுதியில் உள்ளத் தெருக்களில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். மழைநீர் தேக்கத்தால், அந்த வழியே செல்லும் வாகனங்கள் நின்று விடுவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்லும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
வீடுகளின் முன்பு மழை நீர் அதிக அளவில் தேங்கி கழிவு நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடை முழுவதும் மழை நீர் புகுந்ததால், முழங்கால் அளவு தேங்கிய மழைநீரில் பொதுமக்கள் வரிசையாக நின்று பொங்கல் பரிசுகளை வாங்கிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான காலி இடங்கள் வழியாக மழைநீர் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதிக்காத காரணத்தால் தற்போது பல்வேறு இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மழை நீரை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பேரூராட்சி அலுவலர் தற்போது விடுமுறையில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இணைந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.