திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி என்ற கிராமத்தில் சென்னை-மயிலை உயர்மறை மாவட்டத்தின் மூலம் கிரைஸ்ட் கல்லூரி தொடங்கப்பட்டது. கல்லூரி படிப்பை தொடர்வதற்காக நகரங்களை நோக்கி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயணம் மேற்கொள்ளவேண்டிய நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக கிராமத்து மாணவர்களின் உயர்கல்வி கனவை கிரைஸ்ட் கல்லூரி நினைவாக்கி வருகிறது.
ஆங்கில வழி கல்வியை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் இந்த கல்லூரியில், 95 விழுக்காட்டிற்கும் மேலான மாணவர்கள் தமிழ்வழியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள். அவர்களின் ஆங்கில புலமையை மேம்படுத்த 15 நாள்கள் ஆங்கிலம் கற்றுத் தரப்பட்டு, பின்னர் மாணவர்களின் படிப்பிற்கான பாடங்களை கற்றுத் தருகின்றனர். இதனால், இங்கு சுமார் 95 விழுக்காடு மாணவர்கள் ஆண்டுதோறும் தேர்ச்சி பெறுகின்றனர்.
மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கல்லூரி:
மேலும், கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்கள் அனைவருக்கும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்கான அனைத்து பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது. அதோடு, அவர்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றியடைய செய்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
செய்தியாளர்களைச் சந்தித்த கல்லூரியின் செயலாளர் கிராமப்புற மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் நகர்ப்புற கல்லூரிகளுக்குச் சென்று படிப்பதில் சிரமமும், பாதுகாப்பு குறித்த ஐயமும் பெற்றோர்களிடையே ஏற்படுகிறது. இதனால், கிராம பகுதியிலேயே அமைந்துள்ள கிரைஸ்ட் கல்லூரியில் 75 விழுக்காட்டிற்கும் மேல் மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு கல்லூரி வளாகம் முழுவதும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் ஒழுக்கமான கல்வியை பயில சிறந்த பேராசிரியர்கள் வழி நடத்துகின்றனர்.
குறைந்த கட்டணம் வசூலிக்கும் கல்லூரி:
இது குறித்து கிரைஸ்ட் கல்லூரியின் செயலாளர் ஹாரி வில்லியம்ஸ் கூறியதாவது, “எந்த ஒரு ஏழை குடும்பத்து பிள்ளையும் கல்வியைப் பாதியிலேயே விட்டு விடக்கூடாது என்பதற்காக, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்கும் விதமாக தொடங்கப்பட்ட கிரைஸ்ட் கல்லூரியில் இந்தியாவிலேயே குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகையும், கல்லூரி நிர்வாகத்தின் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது” என தெரிவித்தார்.
கரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு வருடங்களாக ஏழை, நடுத்தரக் குடும்பத்தினர் வருமானத்தை இழந்து தங்களின் வாழ்வாதாரத்தை காத்துக் கொள்வதற்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் கட்டணம் வசூலிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இதன் மத்தியில் கிராமப்புற மாணவர்களின் கல்வி பசியைப் போக்குவதுடன், கல்வியை சேவை நோக்கத்தோடு கொடுக்கும் இந்த கிரைஸ்ட் கல்லூரி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தேர்வுத்தாளை அஞ்சலில் அனுப்ப நீண்ட நேரம் காத்திருந்த கல்லூரி மாணவ, மாணவியர்