திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூனிமாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமாமணி. கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகள் தூர்வாரி சமூகப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.
அதிக வட்டி கொடுப்பதாக ஆசைக் காட்டியதால் பொதுமக்கள் பணம் முதலீடு செய்தனர். தொடக்கத்தில் பணம் முதலீடு செய்தவர்களுக்கு மாதந்தோறும் முறையாக வட்டி வழங்கப்பட்டது. இதை நம்பி மேலும் பலர் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர்.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாந்த செக்யூரிட்டி இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நிதி நிறுவனம் மூடப்பட்டதால், பணம் முதலீடு செய்த பொதுமக்கள் ஏஜென்ட்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டனர். முதலீடு செய்த பணத்தை கேட்டதற்கு பதில் தராததால் முதலீடு செய்தவர்கள் வேதனை அடைந்தனர்.
தொடர்ந்து, நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் பண முதலீடு செய்து ஏமாந்த திருத்தணி அடுத்த பூனிமாங்காடு கிராமத்தைச் சேர்ந்த காவலாளி பாபு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ”பணம் திரும்ப கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தும்பிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி ரூ.15 லட்சம் முதலீடு செய்து ஏமார்ந்து விட்டதாக கவலை அடைந்து கடந்த மாதம் பூச்சி மருந்து குடித்து திருத்தணி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதற்கிடையில், பொதுமக்களிடமிருந்து ஆசையைக் காட்டி பணத்தை ஆட்டையைப் போட்ட கலைமாமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க:ஆன்லைன் சூதாட்டம்: துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை