திருவள்ளூர் மாவட்டம் தேர் வழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தட்சணாமூர்த்தி. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு கும்மிடிப்பூண்டியிலுள்ள தனியார் வங்கியில் எட்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை 60 ஆயிரம் ரூபாய் தவணை செலுத்தும் வகையில் பெற்ற கடனுக்கு, ஊரடங்கு உத்தரவு காரணமாக வருவாய் ஏதும் இல்லாததால் தட்சணா மூர்த்தியால் கடன் தவணை செலுத்த முடியவில்லை.
இந்நிலையில் வங்கி அதிகாரிகள் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து தவணையை செலுத்துமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளனர். இதற்கு அறுவடை முடிந்தவுடன் தவணையை செலுத்துவதாக விவசாயி, வங்கி அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதனைப் பொருட்படுத்தாத அலுவலர்கள் விவசாயின் வீட்டிற்கு ஆள்களை அனுப்பி, நிலத்தை விற்று வாங்கிய கடைனை அடைக்குமாறு நிர்பந்தித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயி கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில், தனியார் வங்கி மீது புகாரளித்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கரோனா காலத்தில் கடன் தவணையை வாரக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது எனவும், கடன் தவணையை வசூலிக்க கடன் வாங்கியவர் வீட்டிற்கு வங்கியிலிருந்து யாரும் செல்லக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தும், தனியார் வங்கி அதிகாரிகள் விவசாயின் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வாய் பேச முடியாத காதல் ஜோடி தற்கொலை - வெளியான வீடியோ