திருவள்ளூர்: தமிழ்நாட்டில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள், நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், மத்திய அரசு 60 விழுக்காடு பங்காக, இரண்டாயிரத்து 145 கோடி ரூபாயும், மாநில அரசு 40 விழுக்காடு பங்காக, ஆயிரத்து 855 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட தலைநகரில், மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே 385 கோடியே 63 லட்சம் செலவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று, பணிகள் மிகத் துரிதமாக நடைபெற்றுவந்தன.
அரசு நிதியில் 190 கோடியே 63 லட்சம் செலவில் அரசு மருத்துவக் கல்லூரி, 195 கோடியில் அரசு மருத்துவமனை சுமார் 22 ஏக்கரில் கட்டி முடிக்கப்பட்டது.
திருவள்ளூர் புதிய மருத்துவக் கல்லூரி அதிநவீன வசதிகொண்ட மருத்துவக் கல்லூரி
அதிநவீன வசதிகளுடன் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில், ஐந்து மாடி ஃபேக்கல்டி பிளாக், இரண்டு மாடியில் அட்மினிஸ்ட்ரேடிவ் பிளாக், நவீன கேன்டீன், உடற்பயிற்சி கூடம், பொதுப்பணித் துறை கட்டடம், வங்கிக் கட்டடம், அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவர்கள், பணியாளர்கள் தங்குமிடம், 750 இருக்கைகள் வசதியுடன் கொண்ட பிரமாண்ட ஆடிட்டோரியம், 5 லக்ட்சரர் தியேட்டர், 500 இருக்கைகளுடன் கூடிய அதிநவீன தேர்வு கட்டடம் உள்ளன.
மேலும், நான்காயிரம் புத்தகம் கொண்ட இரண்டு நூலகம், 25 கணினி வசதியுடன் கூடிய இ-நூலகம், 86 அறைகளைக் கொண்ட மாணவர் மாணவியர் தங்கும் விடுதி, மூன்று ஸ்மார்ட்போர்ட், பணியாளர்கள் தங்கும் குடியிருப்பு வசதி, 100 மாணவர்களுக்கு சி.ஆர்.ஆர்.ஐ. ட்ரெய்னிங், ஸ்கில் லேப் எனப் பிரமாண்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகக் கட்டப்பட்டுள்ளது.
காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி
தற்பொழுது கட்டி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாளை (ஜனவரி 12) பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து காணொலி காட்சி வழியாகத் திறந்துவைக்கிறார். அதேசமயம், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்க்கைக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் காலங்களில் மேலும் சேர்க்கை விகிதம் அதிகரிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மருத்துவக் கல்லூரி காணொலிக் காட்சி மூலமாகத் திறக்கப்பட உள்ளது. திருவள்ளூர் மக்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணமாகும். இந்த மருத்துவக் கல்லூரியை திருவள்ளூர் மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு மாணவர்களைப் பாதிக்குமா?