திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்பியூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
இந்நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு நாகதோஷம் உள்ளதாகக் கூறி, அவரை அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தில் பூஜை செய்தால் தோஷம் தீரும் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று, இளம்பெண்ணின் உறவினர்கள் அவரை திருவள்ளூரை அடுத்த வெள்ளாத்துகோட்டையில் உள்ள ஆசிரமத்திற்கு அழைத்து சென்று முனுசாமி என்ற சாமியாரிடம் பூஜை செய்ய சென்றுள்ளனர்.
இரவு அங்கேயே தங்க வேண்டும் எனக் கூறியதைத் தொடர்ந்து இளம்பெண், தனது உறவினர்களுடன் தங்கினார். அவருக்கு அன்று இரவு பூஜை செய்த நிலையில் மறுநாள் இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் மகள் சாவில் சந்தேகம் இருப்பதால் சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோயிலின் சாமியார் முனுசாமி திட்டம் போட்டு அப்பெண்ணிற்கு நாகதோஷம் இருப்பதாக அந்தப் பெண்ணிடமும், அவரது பெற்றோரிடமும் பொய் சொல்லி அந்த கோயிலுக்கு அடிக்கடி வரவழைத்தது தெரியவந்துள்ளது.
அப்பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாமியார் முனுசாமியை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த விலையுயர்ந்த வாகனம்! - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி