திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மங்காடு பேரூராட்சிக்குட்பட்ட சக்ரா நகர், பட்டூர் கூட்டு சாலை உள்ளிட்டப் பகுதிகளில் வசிப்பவர்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த சில தினங்களாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "மாங்காடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களில் முறையாக மழை நீர் செல்வதில்லை. மேலும், மழைக்காலங்களில் மழை நீர் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்பதால் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி விட்டது. இதனால் நாங்கள் அடிக்கடி மர்மக் காய்ச்சலுக்கு ஆளாகி மிகவும் சிரமப்படுகிறோம்.
குறிப்பாக பட்டூர் கூட்டு சாலை, தோப்புத் தெரு பகுதிகளில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் பூந்தமல்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சிலர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெய்யும் மழை! பரவும் டெங்கு...! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கான சான்றுகள் ஏதும் கொடுக்க மறுப்பதாக சிகிச்சை பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த மர்மக் காய்ச்சல் பல்வேறு இடங்களுக்குப் பரவாமல் இருக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.