சென்னை போரூர் ஏரியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறிய இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுப்பதாக வந்த தகவலை அடுத்து போரூர் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மின்சார கம்பத்தில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்த நபரிடம், காவலர் டார்வின் மனித நேயத்துடன் பேச்சுக் கொடுத்து மீட்டார்.
அந்த நபர் இறங்கி வர மறுத்ததால், "இது போன்ற ஒரு விபத்தில் தனது தம்பியைப் பறி கொடுத்து விட்டேன். எந்த பிரச்னையாக இருந்தாலும் இறங்கி வா... பேசி தீர்த்துக் கொள்ளலாம்" என்று கரிசனையான வார்த்தைகளால் டார்வின் பேச்சுக் கொடுத்தார். நீண்ட நேரமாகத் தற்கொலை மிரட்டல் விடுத்த அவரின் மனதை மாற்றி லாவகமாகக் கீழே இறங்க வைத்தார்.
விசாரணையில் தற்கொலை மிரட்டல் விடுத்தவர் போரூர், சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டி (என்ற) செல்லப்பாண்டி(32) என்பதும்; அவர் வெல்டிங் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவருக்குத் திருமணமாகி இரு மகன்களும் உள்ளனர்.