சென்னை அருகே பெருமாள்பட்டில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய லல்லு என்பவர், அப்பகுதியில் கைப்பந்துப் போட்டி நடத்துவதற்காக வெளியூரிலிருந்து ஒரு குழுவை வரவழைத்துள்ளார். அதற்கு அதே ஊரைச் சேர்ந்த பால்தினகரன், விக்னேஷ், ஜாஹிர் உசேன், மகேஷ் ஆகிய நால்வரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளியூரிலிருந்து யாரும் வந்து ஆடக் கூடாது என்று கூறியதால் தகராறுஏற்பட்டுகாவல் துறையினரால் அந்தப் போட்டி நிறுத்தப்பட்டது. நல்ல முறையில் நடக்கவேண்டிய கைப்பந்துப் போட்டி நிறுத்தப்பட்டதற்கு லல்லு மற்றும் அவரது நண்பர் விமல்தான் காரணம் என நினைத்த அந்த நான்கு பேரும், லல்லுவின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த லல்லு, அந்த நால்வரையும் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் நடந்த இரண்டே மாதத்தில், அந்த நான்கு பேரில் ஒருவரான பால் தினகரன் என்பவரது வலது கை வெட்டப்பட்டது. அதேபோல் ஜாகிர் உசேன் என்பவரைக் கொலை செய்ய நடந்த முயற்சியில் அவர் தப்பியுள்ளார். மேலும், கடந்த பிப்ரவரி மாதம் பெருமாள்பட்டு பகுதியில் விக்கி என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் முக்கிய சாட்சியாக இருந்த மகேஷ், தனது நண்பர்களுக்கு நேர்ந்த கதியால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து விமலை சரமாரியாக வெட்டியுள்ளார். அந்த வழக்கில் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜரானபின் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த மகேஷை, அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
ஓட ஓட விரட்டி கொலை செய்யப்படும் இளைஞர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருத்தணி காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.