மத்திய பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி, டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நெகிழி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெறுகிறது. அந்த வகையில், இன்று திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் எஸ்டேட் மேலாண்மை நிறுவனமும் இணைந்து விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நடைபயணத்தில், நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், தூய்மை உறுதிமொழி பதாகைகளைப் பிடித்துக்கொண்டே நெகிழியிலிருந்து சுற்றுப்புறம் காப்போம் என்ற முழக்கங்களுடன் நடைபயணம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை, நிறுவன இயக்குநரும் விஞ்ஞானியுமான பாலமுருகன் தொடங்கி வைத்தார். அதன் பின் நெகிழியால் ஏற்படும் தீங்கு, அதனை ஒழிப்பதற்கான அவசியம் உள்ளிட்டவற்றை அவர் வலியுறுத்தினார். தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் கூறி சுற்றுப்புறங்களில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.