திருவள்ளூர்: மணவாளநகர் பகுதியில் ஜேசிபி இயந்திரம் தயாரிப்பதற்குத்தேவையான தளவாடங்களை ஏற்றி வந்த லாரி ஸ்பீட் பிரேக் மீது, ஏறி இறங்கும் போது தளவாடங்கள், சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. ஆனால், நல்வாய்ப்பாக அந்த காரில் எவரும் இல்லை என்பது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மணவாளநகர் காவல் துறை மேற்கொண்ட விசாரணையில் கார் உரிமையாளர் ராஜேஷ் என்பவர், போரூர் அடுத்த முகலிவாக்கம் என்ற பகுதியில் இருந்து போளிவாக்கத்தில் உள்ள தொழிற்சாலைக்கு வந்துள்ளார். அப்போது காலை டிபன் சாப்பிடுவதற்குக் காரை சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்து விட்டு, சென்றதும் தெரிய வந்தது.
மேலும் லாரியில் தளவாடங்களை முறையாக கம்பியால் கட்டாமல் கயிற்றால் கட்டிக்கொண்டு வந்ததால், பாரம் தாங்காமல் அறுந்து கீழே விழுந்ததும் தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார் உரிமையாளர் டிபன் சாப்பிடச்சென்றதால் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
திருவள்ளூர் அடுத்த மேல்நலத்தூரில் ஜேசிபி இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை பூந்தமல்லி அடுத்த படூர் என்ற பகுதியில் இருந்து கேட்டர்பில்லர் நிறுவனத்திற்குக் கன்டெய்னர் லாரி மூலம் ஜேசிபி இயந்திரம் தயாரிப்பதற்குத்தேவையான தளவாடங்களைக்கொண்டு வந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது.
ஜேசிபி தளவாடங்கள் சரிந்து விபத்து; நல்வாய்ப்பாக உயிர் தப்பிய கார் உரிமையாளர் இதையும் படிங்க:தடம்புரண்ட பொதிகை எக்ஸ்பிரஸ் இன்ஜின்... விபத்து குறித்து தெற்கு ரயில்வே விளக்கம்