தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் திருட்டு... கோதாவில் குதித்த மக்கள்! தண்ணீருக்கான யுத்தம்... - people protest with empty water fillers

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் ஒருபக்கம் தண்ணீர் திருட்டு, மறுபக்கம் குடிநீருக்கான சண்டை, போராட்டம், மறியல், முற்றுகை என நீளுகிறது பட்டியல். ஒருவேளை இது மூன்றாவது உலகப் போருக்கான ஆரம்பப் புள்ளியோ என எண்ணத் தோன்றுகிறது.

கிராம மக்கள்

By

Published : Jun 12, 2019, 9:04 AM IST

Updated : Jun 12, 2019, 9:18 AM IST

மனிதன் உள்ளிட்ட இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிரிகளுக்கும் இன்றியமையாத தேவை தண்ணீர். அண்மைக் காலமாக இத்தண்ணீர் தேவை என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் மக்கள் பெருக்கம், அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்பம் பெருவளர்ச்சி என உலகம் சுழன்று கொண்டிருக்கையில், அப்படியே மறுபக்கம் பார்த்தால் சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை அழிப்பு, தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.

இதில், தண்ணீர் பஞ்சத்தால்தான் அடுத்த உலகப் போர் மூளும் என கூறப்படுகிறது. ஏனென்றால், நீர்வளம் வணிகமயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் தூய்மையான குடிநீர் என்பது சுலபமாக கிடைக்கும். தற்போது, காசு கொடுத்துவாங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மனிதகுலம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

மனிதனுக்கான அடிப்படைத் தேவைகளில் இன்றியமையாத தண்ணீர் எப்போது எட்டாக் கனியாகிறதோ அன்றே அழிவின் ஆரம்பம் தொடங்கும். இதனால், ஒவ்வொருவரும் மரம் வளர்த்து மழைநீர் பெருக்கி அதனை சேமித்து வைத்து நீர்வளத்தை அதிகரிக்க தங்களால் முடிந்தவைகளை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் அடுத்த தலைமுறை மிஞ்சும்.

இது ஒருபுறமிருக்க, இந்தாண்டு தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டிவதைத்துவருகிறது. இதனால், மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எதிர்க்கட்சிகளும் தங்கள் பங்குக்கு கண்டனம், வசை என குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம், சாலை மறியல், முற்றுகை என நடைபெற்றுவருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டர் பாளையம், சுபா ரெட்டிபாளையம், பள்ளிப்புரம் ஆகிய கிராமங்களில் உள்ள குடிநீரை திருடிச் சென்று லாரிகளில் சென்னையில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகள், உணவகங்களில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் உப்பு நீராக வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டோர் முறையான குடிநீர் வழங்கக் கோரியும், குடிநீர் திருட்டை தடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியர், வட்டார ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் மனு அளித்து, அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென காலிக் குடங்களுடன் கவுண்டர் பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

இதனால் ஒருமணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

Last Updated : Jun 12, 2019, 9:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details