திருவள்ளூர் மாவட்டம்: திருத்தணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிவாசலில் தொடங்கிய பேரணி கமலா திரையரங்கின் அருகே நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் தேசியக் கொடியுடன் ஊர்வலமாக பங்கேற்று மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தருமபுரி மாவட்டம்: மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். விடுதலை சிறுத்தை கட்சியினா் உள்ளிட்ட 17 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை அருகிலிருந்து ஊர்வலமாகச் சென்று பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.