திருவள்ளூர் மாவட்டதை அடுத்த அரண்வாயல் குப்பம் பகுதியில் அரசினர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அரண்வாயல், அரண்வாயல் குப்பம், பாரதியார் நகர், முருகஞ்சேரி, வ.உ.சி. நகர் போன்ற சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 130க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.
இங்கு பயிலும் மாணவர்கள் உயர் கல்வியான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயில, சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொப்பூர் மற்றும் மணவாள நகருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதைத் தொடர்ந்து அரண்வாயல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தி உயர்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் விவரத்தில் அரண்வாயல் குப்பம் நடுநிலைப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டதாக வந்த தகவலில் இந்த பள்ளியின் பெயர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து அரண்வாயல் குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுடன் கையில் அரசு உயர்நிலைப் பள்ளி வேண்டுமென்ற பதாகைகளை ஏந்திக்கொண்டு திடீரென சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் அரண்வாயல் குப்பம் பள்ளி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஒரு மணி நேரமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்தத் தகவல் அறிந்ததும் கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி, மாவட்ட துணை கண்காணிப்பாளர் துரை பாண்டியன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.