திருவள்ளூர்:ரஷ்யா - உக்ரைனிடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைனிலிருந்து மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி தப்பிவருகின்றனர். உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ருமேனியா, ஹங்கேரி வழியாக விமானம் மூலம் மீட்டுவரப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைனில் படிக்கும் தங்களது மகன், மகள்களைப் பாதுகாப்பாக மீட்டுத்தரக் கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் நேற்று (பிப்ரவரி 27) மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்-குமாரி தம்பதியரின் மகள் பிரியதர்ஷினி உக்ரைன்-ரஷ்ய எல்லைப் பகுதியில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்துவருகிறார்.
உக்ரைனில் தவிக்கும் மாணவர்களின் பெற்றோர் திருவள்ளூர் ஆட்சியரிடம் மனு அதேபோன்று நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜீவானந்தம் உக்ரைனில் முதலாம் ஆண்டு மருத்துவம் பயின்றுவருகிறார். பூங்கா நகர்ப் பகுதியில் உள்ள ஜார்ஜ் அலெக்சாண்டர் சுரேஷ் என்பவரது மகள் ஏஞ்சல் கார்கிவ் பல்கலைக்கழகத்தில் படித்துவருகிறார்.
நேற்று நான்காவது நாளாகப் போர் தொடர்ந்து வரும் நிலையில், பாதுகாப்பிற்காகப் பங்கரில் (பதுங்குக் குழி) தங்கியிருப்பதாகவும், நிலைமை மோசமடைந்துவருவதாகவும் தங்களது மகன், மகள்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் விரைந்து தங்களது மகன், மகள்களை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.
இதையும் படிங்க: ரஷ்ய - உக்ரைன் போர்: எப்படி இருக்கிறது தற்போதைய நிலை..!