ஒன்பது ஆண்டுகளாக நடைபெறாமல் தடைபட்டுக் கிடந்த உள்ளாட்சித் தேர்தல், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. பல்வேறு தடைகளை மீறி நடைபெற்ற இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், ஆட்சியில் இருக்கும் அதிமுகவை விட திமுக அதிக இடங்களைப் பிடித்தது.
கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இந்த உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த மறைமுகத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களைப் பிடித்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருவள்ளூர், அரியலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது.