ஊராட்சித் தலைவர்கள் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் - ஊராட்சி மன்றத் தலைவர்கள் போராட்டம்
திருவள்ளூர்: மானியத் தொகை முறையாக வழங்காததைக் கண்டித்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் நலச் சங்கம் சார்பில், சங்கத் தலைவர் வாசுகி நிலவழகன் தலைமையில், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 14, 15ஆவது நிதிக்குழு மானியத் தொகையை ஊராட்சிகளில் முறையாக வழங்கவில்லை.
கரோனா தொற்றுப் பரவல் உள்ள நிலையில், போதிய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கக்கூட பணமில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் நிபந்தனைகள் இன்றி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாகப் பணியும், அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் எனவும், ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் ஊராட்சி செயலாளர்கள் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கைவைத்தனர்.