திருவள்ளூர்:கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிற்றம்பாக்கம் கிராமம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தேவன்(67)-முனியம்மாள்(60) தம்பதியினர் மண் சுவரால் கட்டப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் தேவன், முனியம்மாள், பேரன் சுமித் ஆகிய மூன்று பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். கடந்த 3 நாட்களாக திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்து வந்த கனமழையால் தேவனின் மண் சுவரால் கட்டப்பட்ட ஓலை குடிசை வீடு ஈரப்பதத்தை தாங்க முடியாமல், இன்று (நவ.14) அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த தேவன், மனைவி முனியம்மாள், பேரன் சுமித் மீது விழுந்தது.
இதில் தேவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், முனியம்மாள், பேரன் சுமித் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தனர். அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் முனியம்மாளையும், பேரன் சுமித்தையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
தகவலறிந்த கடம்பத்தூர் சார்பு காவல் ஆய்வாளர் சங்கர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து தேவனின் சடலத்தை மீட்டு பிரேத உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வாறு திருவள்ளூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி மீது மண் சுவரால் கட்டப்பட்டு வீடு சரிந்து பலியான சம்பவம் சிற்றம்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் மழை: குடிசை வீட்டின் சுவர் விழுந்து ஒருவர் உயிரிழந்த சோகம் இதையும் படிங்க: ரேஷன் கார்டுக்கு ரூ.1000 மழை நிவாரணம்; சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவுக்கு முதல்வர் அறிவிப்பு!