திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் நம்மிடம் கூறியதாவது, "உயிரிழந்த அஜித்குமாரைக் கொலைசெய்ய திட்டமிட்டோ, கொலைசெய்யும் நோக்கத்தோடு இளம்பெண் வீட்டிலிருந்து செல்லவில்லை. வெளியில் சென்றபோது, அவரை பாலியல் வன்புணர்வு செய்ய இளைஞர் முயன்றதால், தன்னைத் தற்காத்துக் கொள்ள இளைஞரைக் கத்தியால் குத்தியுள்ளார்.
எனவே, அவர் மீது பதியப்பட்ட கொலை வழக்கைப் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக கொலை செய்தால் குற்றமாகாது எனக் கூறும் இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) 106இன் கீழ் மாற்றி பதிவுசெய்துள்ளோம். மேலும், அவரை கைது நடவடிக்கையில் இருந்து விடுவிக்கிறோம். தொடர்ந்து அவர் எங்கள் பராமரிப்பில் இருக்கிறார்" என்றார்.
#Exclusive தற்காப்புக்காக கொலை செய்த இளம்பெண்ணை விடுதலை செய்த எஸ்.பி. குற்றத்தின் பின்னணி
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஓரக்காடு ஊராட்சியிலுள்ள அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், ஜனவரி 2ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு, அப்பகுதியிலுள்ள வயல்வெளிக்குச் சென்றார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்தவரும், அப்பெண்ணின் உறவினருமான 25 வயது இளைஞர் அஜித்குமார், அந்தப்பெண்ணைப் பின்தொடர்ந்து கத்தியைக் காட்டி பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றார்.
சற்றும் எதிர்பார்க்காத அந்த இளம்பெண், இளைஞரிடமிருந்து கத்தியைப் பிடுங்கி, தற்காப்புக்காக அதேக் கத்தியால் அந்த இளைஞரைக் குத்தினார். படுகாயம் அடைந்த இளைஞர், சிறிது நேரத்திலேயே இறந்தார். இதைத்தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சம்பவத்தை விவரித்து சரண் அடைந்தார். இளம்பெண் அளித்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சோழவரம் காவல் துறையினர் இளைஞரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தற்காப்புக்காக மட்டுமே அந்த இளைஞரை, அவர் கத்தியால் குத்தியதும், அவருக்கு கொலை செய்யும் எண்ணம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இளம்பெண் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302இன் கீழ் பதிவுசெய்த கொலை வழக்கை, ஐபிசி பிரிவு 106ஆக மாற்றினர்.
தமிழ்நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், மகளிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த தனது கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலைசெய்த மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவரை, அப்போது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த அஸ்ரா கார்க், சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரத்தின்கீழ் ஒரேநாளில் விடுதலைசெய்தது குறிப்பிடத்தக்கது.
சிறப்பான நடவடிக்கை
திருவள்ளூர் சம்பவம் தொடர்பான வழக்கு, காவல் துறையினர், வழக்கறிஞர், பெண்கள் அமைப்பினரின் கவனத்தைப் பெற்றுள்ளது. சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஜேஜேஏ நீத்து,’ மனித மிருகத்திடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்தப் பெண் சரியான நடவடிக்கையை எடுத்துள்ளார்’என்றார்.
பாலியல் வன்கொடுமையைத் தடுக்க முயன்ற அந்தப் பெண்ணுடைய வழக்கை, மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன், பொன்னேரி மாவட்ட துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் ஆகியோர் மிகச் சரியாகக் கையாண்டு, அவரை வழக்கிலிருந்து விடுவித்ததையும் வழக்கறிஞர் நீத்து வரவேற்றார்.
பெண்களே கவனம்!
தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் நீத்து சில கடந்த கால சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.” கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் பிசியோதெரபி பயின்ற மாணவியைக் (23) கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தனர். கடந்த 2019இல் ஹைதராபாத் அருகே உள்ள ஷாம் சைதாபாத்தில் கால்நடை மருத்துவரை (26) கூட்டு வன்புணர்வு செய்து கொலை செய்தனர். இந்த குரூர சம்பவங்கள் நம் நாட்டை மட்டுமல்ல, உலக நாடுகளையும் உலுக்கியது.
இந்த மோசமான சம்பவங்களுக்கு மத்தியில் திருவள்ளூரில் நடந்தச் சம்பவம் வரவேற்கக் கூடியது. பெண்களைப் பாலியல் ரீதியாகவும், இன்ன பிற குற்றங்கள் மூலமாகவும் அச்சுறுத்துலுக்குள்ளாக்கும் நபர்களிடம், பெண்கள் இதே மாதிரியான தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டு தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்”என வழக்கறிஞர் நீத்து பெண்களுக்கு அறிவுறுத்துகிறார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞர் கே.இளங்கோவன், மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் முடிவினை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில்,“இந்தக் கொலை தற்காப்புக்காக நிகழ்ந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது.
சட்டத்திலும் தற்காப்புக்கான செயல்கள் எவை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும்கூட காவல் துறையினர் அது பற்றி விரிவான விசாரணை செய்வதே இல்லை.
மூத்த வழக்கறிஞர் கே.இளங்கோவன் கைது மட்டும் தீர்வல்ல!
ஒரு குற்றத்தின் பின்னணியில் சம்பிரதாயமாக செய்யப்படும் செயல்களே அதற்கு சான்று. இங்கு ஒரு குற்றம் நடந்ததும், உடனடியாக குற்றஞ்சாட்டப்பட்டவரை கைது செய்து சிறையில் அடைப்பதுதான் ஒரு குற்றத்தின் பின்னிருக்கும் பொதுவான லாஜிக்காகப் பார்க்கப்படுகிறது. ஐபிசி பிரிவு 302இன்படி, குற்றஞ்சாட்டப்பட்டவர் பிணையில் வெளிவர இயலாது. பல வழக்குகளில் காவல் துறையினர் நேர்மையாக செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை.
சந்தேகத்திற்கு இடமான நபர் (அல்லது) குற்றஞ்சாட்டப்பட்டவரை உடனடியாகக் கைது செய்தால் பிரச்னை முடிந்ததாகக் கருதப்படுகிறது. மேலதிகாரிகளும் கைது நடவடிக்கையை துரிதப்படுத்த வற்புறுத்துகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவரை கைது செய்தவுடன் விசாரணை அதிகாரி அந்த கைதுக்கான காரணத்தை உறுதிபடுத்தி அறிக்கை சமர்ப்பிக்கிறார்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை அந்தப் பெண் கத்திக்கு அஞ்சாமல் சூழ்நிலைக்கு ஏற்படி துரிதமாகச் செயல்பட்டு தன்னை பாதுகாத்துள்ளார்.
’ஒரு நாடு என்பது ஒரு சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவானது' என்பதை காவல் துறையில் உள்ளவர்களும் நீதித்துறையில் உள்ளவர்களும் மறந்து விடுகின்றனர். இந்த ஒப்பந்தத்தின்படி தனிமனிதரின் உயிருக்கும், உடமைக்கும் நாடு, உத்தரவாதம் கொடுக்கும் பொருட்டு, நாட்டினுடைய சட்டத்திட்டங்களை மதித்து நடப்பேன் என்று அவர் உறுதி செய்துள்ளார். அதனால்தான் நாட்டிற்கு வரி செலுத்தி நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கின்றார்.
இந்த வழக்கில் அந்தப் பெண் தன் உயிரை பாதுகாக்க வேறு எவ்வழியும் இல்லாமல் இப்படிச் செய்திருக்கிறார். என்னுடைய வழக்கறிஞர் தொழில் அனுபவத்தில், காவல் துறையில் துணிவான நேர்மையான விசாரணை அதிகாரி தேவை என்பதை நான் தெரிந்துகொண்டேன்.
அந்த விசாரணை அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்டவரை கைது செய்வதைவிட வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை திரட்டுவதில் கவனம் செலுத்துபவராக இருக்க வேண்டும். இதில் இன்னொரு பிரச்னை என்னவென்றால், ஊடகங்களும், மக்களும் முறையான விசாரணைக்கு முன்னதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைது செய்யவே கோருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, சட்டத்தையும் நீதியையும் புறக்கணித்து நீதிமன்றங்களும் மக்களின் உணர்வுகளுக்கு இசைந்து நீதி வழங்குகிறது” என்று முடித்தார். மேலும், மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட துணை கண்காணிப்பாளரின் செயலை வரவேற்ற இளங்கோவன், இருவரும் சரியான நடவடிக்கையை எடுத்ததாகவும், என்ன நேர்ந்தாலும் சட்டமும் நீதியும் காப்பாற்றப்படும் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்தார்.
இதையும் படிங்க:ரூ.10 லட்சம் செல்போன்கள் மீட்பு- உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்பி!