சென்னை ஆவடி அடுத்த மேட்டுப்பாளையத்தில் 2,000 டன் பழங்கள் வரை சேமிக்கக்கூடிய தனியாருக்குச் சொந்தமான ராட்சத குளிர்சாதன பழக்கிடங்கு உள்ளது.
பழக்குவியலுக்கிடையே சிக்கியவர் மீட்பு கிடங்கில் போர்க் லிப்ட் இயந்திர வாகனத்தின் மூலம் பழங்களை அடுக்கும் பணியில் 4 வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பழப்பெட்டி விழுந்தது. அதனையடுத்து ஒன்றன்பின் ஒன்றாக விழுந்து நால்வரும் விபத்தில் சிக்கினர்.
பின்னர் கிடங்கின் வெளியே இருந்த தொழிலாளிகள் அலறல் சத்தம் கேட்டு 4 பேரையும் மீட்க போராடினர். பழக்கிடங்கின் நுழைவாயில் முழுவதுமாக மூடியிருந்ததால் சுவற்றை துளையிட்டு மூன்று தொழிலாளிகளை மட்டுமே உடனடியாக மீட்க முடிந்தது. உள்ளே ஒருவர் மட்டும் வசமாக சிக்கிக்கொண்டார்.
இதனையடுத்து காவல் துறையினருக்கும், மீட்பு படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த சென்னை புறநகர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை அலுவலர் சரவணன் தலைமையிலான மீட்பு படையினர் விடிய விடிய மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு பல்வேறு யுக்திகளை கையாண்டனர். ஆனால் அது பலன் அளிக்காததால் கிரைன் மூலம் நுழைவாயிலை உடைத்து இறுதியாக காலை 9 மணியளவில் வட மாநில இளைஞரைப் பாத்திரமாக மீட்டு கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் 2 கோடி மதிப்பிலான 540 டன் எடையிலான பழங்கள் சேதமடைந்தன.