ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் நித்து(21). இவருக்கு நிகில் பாண்டே என்பவருடன் திருமணமாகியுள்ள நிலையில், திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சக நண்பர்களுடன் மணவாள நகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விருந்திற்கு சென்றுள்ளார். அங்கு அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு தனது ஜீப்பை எடுத்துக்கொண்டு அவரே ஓட்டிச் சென்றுள்ளார். புறப்பட்ட சிறிது தூரத்திலேயே முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.
குடிபோதையில் ஜீப் ஓட்டி விபத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி துரைபாண்டியன், அப்பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மது போதையில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறுவதுடன் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, அப்பெண்ணின் நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, வரவழைத்த காவல் துறையினர் அவரை பெற்றோரிடம் ஒப்படைக்க அனுப்பி வைத்தனர். அப்பெண் ஓட்டிவந்த ஜீப்பை பறிமுதல் செய்த காவல் துறையினர், பெற்றோருடன் வந்த பிறகு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்தனர். இதனால் மணவாள நகர் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது