திருவள்ளூர்: திருத்தணி அருகே மத்தூர் ஊராட்சியில், அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறை பூட்டுகளில் மனித மலத்தை பூசிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பள்ளியை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் மத்தூர் ஊராட்சியில், ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இருப்பினும் பள்ளியில் கட்டமைப்பு சரிவர இல்லாத காரணத்தினால் சாதி ரீதியிலான பல்வேறு பிரச்சினைகளை மாணவர்கள் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது அப்பள்ளி வகுப்பறை பூட்டுகளில் முகம் தெரியாத சில மர்ம நபர்கள் மலத்தை பூசிச் சென்றதாக கூறப்படுகிறது. நேற்று (ஆகஸ்ட். 18) வழக்கம் போல் காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியினுள் செல்லாமல் வகுப்பறை வாசலிலேயே அதிர்ச்சி அடைந்து நின்றனர்.
பள்ளி வகுப்பறை பூட்டுகளில் யாரோ மர்ம நபர்கள் மனித மலத்தை சிலர் பூசித் சென்றதாக தெரிகிறது. வகுப்பறை பூட்டுகளில் மனித மலத்தை பூசிச் சென்ற மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.