திருவள்ளூர்:செவ்வாப்பேட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தொட்டிக்கலை, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் மகன் வேலு (30). வெல்டரான வேலு கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவனது நண்பர்கள் செல்வா (26), கோகுல், ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேரும் செவ்வாப்பேட்டை அடுத்த சிறுகடல் டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காக சென்றனர். டாஸ்மாக் கடைக்கு பின்புறம் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது சைட் டிஷ் வாங்குவதில் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது குடிபோதையில் வேலுவின் நண்பனான செல்வா என்பவர் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேலுவின் கழுத்து, வயிறு, கை, கால், என சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே வேலு துடிதுடித்து உயிரிழந்தார். செவ்வாபேட்டை போலீசார் வேலு கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து படுகொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் மகேஷ் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் செவ்வாப்பேட்டை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை மடக்கி சோதனை செய்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த செவ்வாப்பேட்டை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சிறு கடல் அருகே டாஸ்மாக் கடை அருகே வேலுவை கத்தியால் வெட்டிக் கொலை செய்த செல்வா மற்றும் ஸ்டாலின் என்பது தெரியவந்தது. இதையடுத்து செல்வா மற்றும் ஸ்டாலினை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.