திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அக்கரப்பாக்கம் சவுக்குமேடு பகுதியில் வசித்துவந்தவர் கௌரியம்மாள் (40). இவர் ஆரணி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிவந்தார். துப்புரவுப்பணி முடித்துவந்த பிறகு தமக்குச் சொந்தமான பன்றிகளை தொட்டியில் கட்டி மேய்க்கும் பணிகளையும் மேற்கொண்டுவந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பன்றிகளை மேய்க்கச் சென்ற கௌரியம்மாள் இரவு வீடு திரும்பாத நிலையில், 12ஆம் தேதி ஏரியில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் முள்புதரில் சடலமாக மீட்கப்பட்டார்.
கௌரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தாலி சங்கிலி, ஒரு கம்மல் காணாமல்போனதால் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பெரியபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், கொலைசெய்யப்பட்ட கௌரியின் அண்ணன் மகனான குமார் (30) என்பவரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில் கௌரியின் மீது ஆசைப்பட்டு கடந்த ஞாயிறன்று அவர் பன்றிகளை மேய்க்கும்போது அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் கொள்ளையர்கள் கைவரிசை என்பது போல இருக்க வேண்டும் என்பதால் நகைகளைப் பறித்ததையும் குமார் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, குமாரை கைதுசெய்த காவல் துறையினர் அவரிடமிருந்து நகைகளையும் மீட்டனர். இதையடுத்து, உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.