தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நடைபெறாமல் இருக்க 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தகுந்த காரணம் இல்லாமல் சாலைகளில் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர். அதனையும் மீறி வெளியே வரும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இது தவிர பல்வேறு காரணங்களால் வெளியில் வரும் மக்களை நடு சாலையில் நிற்கவைத்து தோப்புக்கரணம் போட வைத்தல், கைகளைத் தூக்கி நிறுத்துதல் மன்னிப்பு கேட்க வைத்தல், அடித்தல் போன்ற பல்வேறு விதமான தடுப்புகளைக் காவல் துறையினர் கையாண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் அவ்வழியாக வந்த 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, அவர்களது கைகளை உயர்த்தி இதுபோல் அரசு உத்தரவை மீறி இனிமேல் வெளியே வரமாட்டோம், அரசு உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என உறுதிமொழி ஏற்க வைத்தனர்.
தடையை மீறிய வாகன ஓட்டிகள் இதன் பின்னர், கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன், போக்குவரத்து ஆய்வாளர் கண்ணபிரான் ஆகியோர், இதேபோல் வந்தால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனர்.
இதையும் படிங்க:ஜனநாயக படுகொலை? மெஹ்பூபா முப்திக்கு தொடரும் வீட்டு சிறை!