திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காந்தி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மூலவருக்கு சந்தன காப்பு, மதியம் மகாபாரத சொற்பொழிவு, இரவு நாடகம், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது.
இந்நிலையில், காலை ஒன்பது மணிக்கு கோயில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.
திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா மேலும், சிலர் ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதையடுத்து, மாலை 6.30 மணிக்கு ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள நந்தி ஆற்றங்கரையிலிருந்து பூ கரகம் ஊர்வலத்துடன் கொண்டுவரப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி முழக்கமிட்டனர்.
பின்னர், வான வேடிக்கைகளுடன் உற்சவர் திரௌபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.