திருவள்ளூர்: முருகப்பெருமானின் பிரசித்திபெற்ற 5ஆம் படை வீடாகத் திகழ்வது, திருத்தணி சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலானது பச்சரிசி மலை, புண்ணாக்கு மலை ஆகிய 2 மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இன்று முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகளவு உள்ளூர் பக்தர்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கோயில் அருகில் வனப்பகுதி என்பதால், அப்பகுதியில் அதிக அளவு குரங்குகள் சுற்றித் திரிவது வழக்கம். மேலும் முருக பக்தர்கள் மலை மீது அதிக அளவு பழம் மற்றும் தேங்காய் ஆகியவற்றை குரங்குகளுக்கு வழங்கி வருவதால் இந்த பகுதியில் உள்ள குரங்குகள் அதிகளவு மலைப்பகுதியில் சுற்றி வரும். இந்நிலையில் இன்று திடீரென்று மலைக் கோயிலில் மூலவர் முருகப்பெருமான் சந்நிதி பகுதியில் 5-திற்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளே சென்றதால் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் அலறயடித்துக் கொண்டு வெளியேறினார்கள்.