திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தனியார் நிறுவன பங்களிப்பில் அமைக்கப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான குழந்தைகள் பராமரிப்பு மையம், தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் மூலம் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஜனகராஜகுப்பம், அய்யனேரி ஆகிய கிராமங்களில் தலா 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது தனியார் நிறுவன பங்களிப்பில் அமைக்கப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான குழந்தைகள் பராமரிப்பு மையம், தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் மூலம் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம், ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், “திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 500 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக உள்ள நிலையில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தினாலும் ஆக்சிஜன் தேவையை பொறுத்தவரை முழு நிறைவுடன், தன்னிறைவு பெற்ற மருத்துவமனையாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் கானொளி காட்சி மூலம் 11 மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கி வைத்ததில் அதிகமான ஆக்சிஜன் சேமிப்பு வசதி இருக்கிற ஒரே கல்லூரியும் இது தான். அதே நேரத்தில் 100 விழுக்காடு பணிகளும் நிறைவடைந்த கல்லூரியும் இது தான். இந்த கல்வி ஆண்டில் 100 மாணவர்கள் சேர்க்கை மட்டுமே நடந்த நிலையில் அடுத்த ஆண்டு 150 மாணவர் சேர்க்கை நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவிலேயே அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி என மொத்தம் 70 மருத்துவக் கல்லூரி கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அதே நேரத்தில் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள வசதிகள் போன்று வேறு எந்த கல்லூரியிலும் இல்லை. அதேபோல் மருத்துவமனை ஊழியர்கள், பணியாளர்கள், செவிலியர் என 640 பேர் உள்ள நிலையில் அவர்களது குழந்தைகளை பராமரிக்க ஏதுவாக தனியார் அமைப்பு மூலம் பராமரிப்பு மையம் ஏற்படுத்தியது போல் தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இது போன்ற ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக திருத்தணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் அதனை மேம்படுத்த இந்த ஆண்டு 47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடுப்பூசியை ஒரு இயக்கமாகவே நடத்தி வரப்படுகிறது. கரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாக்க ஏதுவாக முதல் தவணை தடுப்பூசியை 95.24 விழுக்காடு பேரும், 2ஆவது தவணையாக 87.28 விழுக்காடு பேரும் செலுத்தியுள்ளனர். தற்போது 64 லட்சத்து 28 ஆயிரத்து 420 தடுப்பூசிகள் தயார் நிலையில் இருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க:எட்டப்பர்களை வைத்து வீழ்த்தி விடலாம் என நினைக்காதீர்கள் ஸ்டாலின்! - ஈபிஎஸ்