சென்னை அருகே வளர்ந்து வரும் ஊர்களில் ஆவடியும் ஒன்று. இங்கு பேருந்து நிலையம்,ரயில் நிலையம், மார்கெட் உள்ளிட்டவை அருகே இருப்பதால் போக்குவரத்திற்காகவும் வணிகத்திற்காகவும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இதனால் ஆவடி பகுதி எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும். இந்நிலையில் ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி ராணுவ சாலை வரை காய்,கனி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நடைபாதை வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை சரிசெய்யும் விதமாக நடைபாதை வியாபாரிகளுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ரூ.62 லட்சம் மதிப்பில் வணிக வளாகம் கட்டப்பட்டது. 68 கடைகள் கொண்ட இந்த வணிக வளாகம், 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
ஆனால் அந்த கடைகளுக்கு அதிக தொகை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடபட்டதால் நடைபாதை வியாபாரிகளுக்கு கடைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள் நீதிமன்றத்தை நாடினர். இப்படி பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஆறு ஆண்டுகளாக வணிக வளாகம் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் வணிக வளாகத்தில் உள்ள 68 கடைகளுக்கும் இன்று ஓபன் டெண்டர் விடுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது.
நடைபாதை வியாபாரிகள் போராட்டம் அப்படி ஓபன் டெண்டர் விட்டால், ஆளும் கட்சி பிரமுகர்கள், பணம் படைத்த முதலாளிகள் கடையை ஏலம் எடுத்து மேல் வாடகைக்குவிடும் சூழல் ஏற்படும் என்பதால், அதிருப்தியடைந்த நடைபாதை வியாபாரிகள், தங்களுக்கு கடையை ஒதுக்க வேண்டும் என மண்ணெண்ணெய் கேனுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி காவல்துறையினர், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.