திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவலங்காடு வேணுகோபாலபுரம் அருகே திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா. இவர் திருவலாங்காடு ஏரியில் மீன் பண்ணையை குத்தகை எடுத்து வளர்த்துவருகிறார்.
வழக்கம்போல் தனது மீன் பண்ணையை பார்வையிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிய ரஹ்மத்துல்லா வேணுகோபாலபுரம் சாலையின் அருகே தடுப்பணை அல்லாத ஓடையில் நிலைதடுமாறி விழுந்தார். இதில் ரஹ்மத்துல்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த நபர் ரஹ்மத்துல்லா இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக திருவலாங்காடு காவல்நிலைய காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவலாங்காடு காவல் உதவி ஆய்வாளர் சேகர் தலமையிலான காவலர்கள் ரஹ்மத்துல்லா உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த உயிரிழப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த திருவலாங்காடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தடுப்பணை அல்லாத ஓடை செல்வதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்கிறது. இதனை மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும் தலையிட்டு உடனடியாக அப்பகுதியில் சாலையின் ஓரத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும்" என்றார்.