திருவள்ளூர் மாவட்டம் ஆந்திரா - தமிழ்நாடு எல்லையிலுள்ள ராகவல்சா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சேஷையா. இவர் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி பாலசமுத்திரம் கிராமத்திலுள்ள வங்கியில், 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தனது மனைவியுடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஆர்.கே பேட்டை அருகேயுள்ள வெள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் என்பவர், தான் ஒரு காவல் துறை அலுவலர் என்று கூறியும், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்யவதாகக் கூறியும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து பணத்தைப் பறிகொடுத்த சேஷய்யா, ஆர்.கே பேட்டை காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகாரளித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரித்தபோது, கொள்ளையடித்த நபர் மீது ஏற்கனவே சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வழிப்பறி கொள்ளைகள் தொடர்பான புகார்கள் காவல் துறை கண்காணிப்பாளரிடம் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புகாரின் பேரில் தனிப்படைக் காவல் துறையினர் சாமுவேலைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.