கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் வெளியே வருபவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக காவல் துறையினர் கையில் எடுத்துள்ள புதிய ஆயுதம் தான் ட்ரோன் எனும் கழுகுப் பார்வை கேமரா. மூலைமுடுக்கெல்லாம் பாய்ந்து பாய்ந்து மக்களைத் துரத்தி வீட்டுக்குள் அனுப்பிக்கொண்டிருக்கும் காவல் துறையின் ட்ரோன் பார்வையில், கிரிக்கெட், கேரம் முடிந்து தற்போது காதல் விளையாட்டும் சிக்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏரிக்கரை பகுதியை அம்மாவட்டக் காவல் துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்தனர். அப்போது, கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் அனைவரும் ட்ரோனை கண்டதும் தண்ணீரில் நீந்தியும், மரத்தில் ஏறியும், லுங்கியை கொண்டு முகத்தை மூடியும் தப்பியோடினர். இதைத் தொடர்ந்து ட்ரோனை நிறுத்தாத காவல் துறையினர், தைல மரங்கள் இருக்கும் காட்டுக்குள் ஒரு ரவுண்டு அடிக்கச் சென்றனர்.