திருவள்ளூர்:திருத்தணி தோட்டக்காரன் மாடம் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர் வில்லிவாக்கத்தில் தனியார் கம்பெனி ஒன்றை நடத்திவருகிறார்.
இவரது தந்தை நந்தன் அதிமுகவில் திருத்தணி 15ஆவது வட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நந்தன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொங்கல் சிறப்புத் தொகுப்பை பெற்றுள்ளார்.
அவர் பெற்ற பொங்கல் தொகுப்பில் புளியில் பல்லி இறந்து கிடந்தது. இது தொடர்பான காணொலிகள் வெளியாகின. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ரேஷன் கடை ஊழியரிடம் முறையிட்டும், செய்தியாளர்களிடமும் தகவலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியன.
இதையடுத்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நந்தன் செயல்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், நந்தன், அவரது குடும்பத்தினருக்கு காவல்துறையினர் நெருக்கடி கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நத்தனின் மகன் குப்புசாமி நேற்று (ஜன.11) திடீரென தற்கொலைக்கு முயன்றார்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர் குப்புசாமியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இன்று (ஜன.12) அதிகாலை சிகிச்சை பலனின்றி குப்புசாமி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பு - அரசை குறை கூறுவதா? - அமைச்சர் சக்கரபாணி