திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராற்றில் கூலித் தொழிலாளியைக் கல்லால் தாக்கி கொலை செய்த சக தொழிலாளியை, சிப்காட் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், "திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டையில் முரளி என்பவருக்குச் சொந்தமான லேத் பட்டறை உள்ளது. இந்த லேத் பட்டறையில் வேலை செய்து வரும், சென்னை விம்கோ நகரைச் சேர்ந்த ரவி (வயது 58) மற்றும் ஆர்.கே.பேட்டை, ஜனகராஜ குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இன்பநாதன் (வயது 47) ஆகிய இருவரும் பட்டறையை ஒட்டியுள்ள அறையில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாய் தகராறு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில், இன்பநாதன் ரவியின் கை விரலைக் கடித்துக் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ரவி, அருகாமையிலிருந்த கல்லைத் தூக்கி இன்பநாதனின் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த இன்பநாதன் ரத்த வெள்ளத்தில் அவ்விடத்தில் சரிந்து கிடந்துள்ளார்”.