பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் - கண்டலேறு அணை
திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் வந்தடைந்தது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்படவேண்டும்.
அந்த ஒப்பந்தத்தின்படி இந்தப் பருவத்திற்கான தண்ணீர் செப்டம்பர் 18ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1, 500 கனஅடி வீதம் திறந்துவிடப்பட்டது. பின்னர் அது 2 ஆயிரம் கனஅடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அந்தத் தண்ணீரானது கண்டலேறு பூண்டி கால்வாய் வழியாக நேற்று (செப்.20) இரவு 9 மணி அளவில் தமிழ்நாடு எல்லைப் பகுதிக்கு வந்தடைந்தது.
ஊத்துக்கோட்டையில் இருந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு 25 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இன்று (செப்டம்பர் 21) காலை வந்தடைந்தது. வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
கால்வாய் பகுதிக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட இருப்பதால் கிருஷ்ணா கால்வாயில் யாரும் குளிக்கக்கூடாது. ஆடு மாடுகளுக்குத் தண்ணீர் அருந்தவிடக்கூடாது என்றும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.