திருவள்ளூர் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள கடம்பத்துாரில், ரூ.14.5 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி, 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. இதில், நெடுஞ்சாலை பகுதியில் 25 பில்லர்கள், ரயில்வே பகுதியில் நான்கு பில்லர்கள் என மொத்தம், 29 பில்லர்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில், கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம் முதல் ரயில்வே கேட் வரை பில்லர்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. இதேபோல், கசவநல்லாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலிருந்து தொடங்கப்பட்ட மேம்பால பணிகள் ரயில்வே கேட் வரை நிறைவடைந்தன.
கடம்பத்தூரில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி இழுபறி...!
திருவள்ளூர்: கடம்பத்துாரில் திட்ட காலம் முடிந்தும் ரயில்வே மேம்பால பணிகள் அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஆனால், இருபுறமும் ரயில்வே கேட் உள்ள பகுதியில் பாலத்துக்கான பில்லர் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் பல மாதங்களாக நடந்துவருவதால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'பாலம் பணிகள் தொடங்கி 18 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டம் நிறைவு செய்ய வேண்டிய காலம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், பெரும்பாலான பணிகள் இன்னும் நடைபெறவில்லை.
நகரின் மையப்பகுதியில் பணி நடப்பதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். மற்ற பாலம் பணிகளை போலவே, ரயில்வே மேம்பால பணியும் இழுத்தடிக்கப்பட்டும்வருவது, மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது. பஸ்கள் வந்து செல்வதில் சிரமம், போக்குவரத்து நெரிசல், பயணிகளுக்கு தேவையற்ற அலைச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால், கடம்பத்தூரில் மேம்பால பணியை விரைந்து முடிக்க, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.