கொத்தடிமைகளாக ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள்: அலுவலர்கள் அதிரடி சோதனை - ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகள்
திருவள்ளூர்: செங்குன்றத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக வந்த புகாரை அடுத்து அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து 120 தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக அம்மாநில அரசு தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்திற்கு அளித்த தகவலின்பேரில், திருவள்ளூர் தொழிலாளர் நலத்துறை அமலாக்க உதவி ஆணையர் சுதா, செங்குன்றம் மொண்டியம்மன் நகரில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கிருந்த சதீஷ் என்பவரை விசாரணை செய்தனர். அதில் அவர், முறையாகப் பதிவுசெய்து வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், முறையாக இ-பாஸ் பெற்று தொழிலாளர்களை வரவழைத்துள்ளதாகவும், அவர்கள் அனைவருமே ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி, காளஹஸ்தி ஆகிய பகுதிகளில் வேலை பார்த்து வருவதாகவும் தெரியவந்தது.
அதே நேரத்தில், கரோனா காலத்தில் 120 தொழிலாளர்களை முறையாகப் பரிசோதனை செய்யாமலும், வேலைவாய்ப்பு வழங்குவதற்கான எந்தவித உரிமமும் காட்டப்படாமல் இருந்ததாலும், சதீஷிடம் அலுவலர்கள் தொடர் விசாரணை நடத்தினர்.
120 தொழிலாளர்களும் ஆந்திராவில் இருப்பதாக தெரிவித்ததால், அங்கேயும் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தொழிலாளர் நலத்துறை அமலாக்க உதவி ஆணையர் சுதா தெரிவித்தார்.