திருவள்ளூர்:ஊத்துக்கோட்டை அடுத்த முக்கரன்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன் (45). சென்னை புழல் பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் இவர், விவசாய நிலங்களைப் பராமரிக்கத் தனது சொந்த கிராமமான முக்கரன்பாக்கம் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 2) முக்கரன்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர்களுடன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்துவிட்டு இன்று (மார்ச் 3) அதிகாலை இரண்டு மணிக்கு வெங்கடேசன் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 40 சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருள்கள், 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளைபோனது தெரியவந்தது.
உடனடியாக ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர் தற்கொலை