திருவள்ளூர்: வெங்கல் அருகே நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி புன்னப்பாக்கம் குவாரியில் மண் அள்ள வந்த பொக்லைன் இயந்திரங்களை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த புன்னப்பாக்கம் பகுதியில் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. இதில் மண் அள்ளப்பட்டால் புன்னப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என ஏற்கனவே அப்பகுதி மக்கள் 2 முறை போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் அங்கு அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதாகவும், இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் கூறி புன்னப்பாக்கம் கிராம மக்கள் மண் அள்ள வந்த பொக்லைன் இயந்திரங்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புன்னப்பாக்கம் குவாரியில் மண் அள்ள வந்த பொக்லைன் இயந்திரங்கள் சிறைப்பிடிப்பு! அப்போது அங்கு போராட்டம் நடத்த பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள், அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.