மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகளை விளக்கும் வகையில் ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 21ஆம் தேதி முதல் பாஜக சார்பில் விவசாயிகளுடன் கலந்துரையாடும் கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது.
அந்த வகையில், திருவள்ளூரை அடுத்த மெய்யூர் கிராமத்தில் இன்று (டிச.25) ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில், ஒரு சில எதிர்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய விளைப் பொருளுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் எனக் கோரி எந்த சட்டத்தை கொண்டு வரவேண்டுமென எதிர்க்கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தார்களோ அதை தான் பிரதமர் மோடி தற்போது நடைமுறைப்படுத்தி உள்ளார்.
இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ, பிரச்னைகள் இருந்தாலோ அரசிடம் நேரடியாக பேச்சு வார்த்தைக்கு வாருங்கள், திறந்த மனதுடன் விவாதிக்க தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதனை விவசயிகள் புரிந்துகொள்ள வேண்டும். புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. உற்பத்தி செய்தவர்களுக்கு, அதை நல்ல விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.