திருவள்ளூர்: செங்குன்றம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ’எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கரோனா காலத்தில் 2 ஆண்டுகளாக இடை நின்ற கல்வியை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா வைரஸ் பரவல் காரணமாக, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கல்வியில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நம்பியுள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு எழுத்துகளை அறிந்துகொள்வதில் கூட பிரச்னை இருப்பதாக ஆய்வு முடிவு மூலம் அரசுக்கு தெரியவந்துள்ளது.
இதற்காகத்தான் ’எண்ணும் எழுத்தும்’ என்ற பெயரில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தாங்களாகவே கல்வி கற்கும் வண்ணம் வகுப்பறைகள் மாற்றியமைக்கப்பட்டு, செய்முறைகள் மூலம் பாடத்தை சொல்லிக் கொடுப்பதற்கான திட்டம்தான், 'எண்ணும் எழுத்தும்' திட்டம்.
தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் எளிய வகையில் புரிந்துகொள்ளும் வகையில் கதைகளுடனும் வண்ணப்படங்களுடனும் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதற்காக கடந்த ஒரு வாரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. எளிய முறையில் கணக்குகளை சொல்லித் தருதல், எளிய முறையில் அடிப்படை எழுத்துகளைப் புரிய வைத்தல் போன்ற அம்சங்கள் இந்த திட்டத்தில் உள்ளன என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு வகுப்பறையே விளையாட்டு பொருட்களால் நிரம்பி இருப்பது போன்று , அனைத்து தொடக்கப்பள்ளிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், 'பள்ளி திறக்கப்பட்டுள்ள இந்த நாளில் மாணவர்களுக்கு வாழ்த்துகள். சென்னையின் குடிநீர் தேவையைத் தீர்க்கும் இடம் புழல் ஏரி,
கரோனா ஊரடங்கு காலத்தில் கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாகத்தைத் தீர்க்கும் நீர் போல கல்வி தாகத்தை தீர்க்க இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.
ஒவ்வொரு குழத்தையும் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ’எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, ”எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்”, என்ற ஔவையார் பாடலை மேற்கோள்காட்டி முதலமைச்சர் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், 'அனைவருக்கும் கல்வி என்பது தான் திராவிட மாடல் அரசு. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் ரீடிங் மாராத்தான் என்ற சாதனையை தமிழ்நாடு மாணவர்கள் படைத்துள்ளார்கள்.