திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஐந்து சட்டம் ஒழுங்கு காவல் நிலையமும், ஒரு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையமும் செயல்பட்டு வருகிறது. மாதர்பாக்கம், பாதிரிவேடு, கவரப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய காவல் எல்லைக்கு உட்பட்ட பாதிரிவேடு, மாநல்லூர், எளாவூர், ஆத்துப்பாக்கம், சுண்ணாம்புகுளம், தச்சூர் போரக்ஸ் நகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் 24 மணிநேரமும் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், தனியார் பார் உரிமையாளர் ஒருவர் அதிகாலை முதலே உரிமத்துடன் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாகவும், அருகாமையில் செயல்படும் பார், உரிமம் இல்லாமல் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், டாஸ்மாக் கடையில் உள்ள மதுபானத்தின் நிறத்தைக் காட்டிலும், தனியார் பார்களில் விற்பனை செய்யப்படும் மது பானங்களின் நிறம் கூடுதலாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுமட்டுமல்லாது, பார்களில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களில் போதை அளவு அதிக அளவில் உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட விஷ சாராய உயிரிழப்புகளை அடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உயிரிழப்பு ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கைகள் அதிகரித்து வருகிறது.