திருவள்ளூர்: வீரங்கிவேடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் கோகுல் ராஜ், இவர் நேற்று (அக்.21) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸை சந்தித்து தனது காதல் மனைவியை அவரது பெற்றோரிடமிருந்து மீட்டுத் தர வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதில், "கோகுல் ராஜ் ஆகிய நானும் அதேபகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் வேறு சாதியை சேர்ந்தவர்கள். எங்கள் திருமணத்திற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி கோயிலில் முறைப்படி திருமணம் செய்து கொண்டோம்.
2019 மார்ச் 27ஆம் தேதி ஊத்துக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டோம். பின்னர் நானும், என் மனைவியும் கணவன் மனைவியாக இல்லற வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். இந்த நாள்களில் எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படவில்லை.
பெற்றோரிடமிருந்து மனைவியை மீட்டுத் தர வேண்டி கணவன் கோரிக்கை நாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டதை தெரிந்துகொண்ட நந்தினியின் குடும்பத்தினர் இத்தனை ஆண்டுகளாக எங்களை பார்க்க வரவில்லை. ஆனால் மார்ச் 27ஆம் தேதி என் வீட்டிற்கு வந்து, எனது மனைவியை அழைத்துசென்று, தனிமையில் வீட்டுச் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் எனது மாமனார் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனைவிக்கு விவாகரத்து கொடுக்கும் படியும் கூறினார். பின்னர் என் மனைவி நந்தினியின் உறவுக்காரன் ஜெகன் என்பவர் என்னை தொடர்பு கொண்டு 'நீ உன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும். நாங்கள் வேறு ஒரு நபருக்கு நந்தினியை திருமணம் செய்துவைக்க நிச்சயித்து உள்ளோம்' எனப் பலமுறை தொடர்பு கொண்டு மிரட்டி வருகின்றனர்.
எனக்கோ அல்லது எனது மனைவியின் உயிருக்கோ பாதிப்பு ஏற்படும் எனில் அதற்கு முழு பொறுப்பினை அவரது குடும்பத்தினர் ஏற்க வேண்டும். எனக்கு சென்னை ஆணையர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நேரில் அழைத்தார்கள் அழைத்தனர். நானும் அங்கு சென்றிருந்தேன். அங்கு எனக்கும், என் மனைவிக்கும் தொடர்பு இல்லை என்று எழுதிக் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தி எழுதி வாங்கிக் கொண்டனர்.
நல்ல மனநிலையில் எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லாமல், வீட்டிற்குச் சென்ற எனது மனைவி நந்தினியை மீட்டு தரவேண்டும். மேலும் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக கையெழுத்துப் பெற்ற அவரது உறவுக்காரர் ஜெகன், ஆகாஷ் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஊராட்சி மன்றத் தலைவருக்கு அரிவாள் வெட்டு; இருவர் கைது