திருவள்ளூர்: கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (32) என்பவருக்கும், ஈரோடு சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த (26) பெண்ணுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணம் நடைபெற்று ஓராண்டுக்குள் கணவர், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
அதனால் கணவர் மனோஜ், கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் மனைவியிடம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. மனைவியும் கணவரை விவாகரத்து செய்வதற்கு ஒப்புக் கொண்டதால், திருமணத்திற்கு மனைவி கொண்டு வந்த சீதனப் பொருட்களை அவரிடம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனை அடுத்து, மனோஜ் வெளிநாடு செல்ல இருப்பதால், தனது தரப்பில் ஆஜரான வழக்கறிஞரின் முகவரிக்கு, விவகாரத்து செய்த மனைவியின் சீதனப் பொருட்களான 25.6 கிராம் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 2.10 லட்சம் மதிப்புடைய பொருட்களை கோயம்புத்தூர் பகுதியில் உள்ள தனியார் கொரியர் சேவை மூலம் கடந்த ஜூன் 30ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளார்.
அந்த பார்சல் ஜூலை 4ஆம் தேதி அன்று, திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள அந்த தனியார் கொரியர் கிளைக்கு வந்துள்ளது. அந்த பார்சலை வழக்கறிஞர் ஜூலை 6ஆம் பெற்றுக் கொள்வதாகவும், அதற்கான கூடுதல் பணத்தை செல்த்துவதாகவும் கூறியதாக வழக்கறிஞர் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், அந்த கொரியர் சேவை நிறுவனம் அந்த பார்சலை, எந்தவித தகவல் அளிக்காமல் மேட்டூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. அது குறித்து மேட்டூரில் உள்ள அந்த கொரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கேட்டபோது, அத்தகைய பார்சல் அங்கு வரவில்லை என கூறியுள்ளனர்.