திருவள்ளூர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில் நேற்று (அக்.11) நடந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலிப்போராட்டத்தில் திருவள்ளூர் பகுதியைச்சேர்ந்த பல்வேறு கட்சியினர் பங்கேற்று சனாதனக் கொள்கைக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு எதிராகவும் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திருவள்ளூரில் விசிக மேற்கு மாவட்ட செயலாளர் மு.வா.சித்தார்த்தன் தலைமையில், உழவர் சந்தை அருகே நடந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலிப்போராட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 40-க்கும் மேலான அமைப்பைச்சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் பெருந்திரளாக பங்கேற்றனர்.
இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடையே பேசிய திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார், 'இந்தியாவின் ஜனநாயக கொள்கையை சிதைத்து ஒற்றுமையாக வாழும் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரிடையே சாதி, மத ரீதியாக மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். இதை எதிர்த்தும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் இந்த மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது' என்றார்.
திருவள்ளூரில் சமூக நல்லிணக்க மனித சங்கிலிப்போராட்டம் இந்நிகழ்ச்சியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழு செயலாளர் நீலவானத்து நிலவன், மாநில வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் செஞ்சி செல்வம், நிர்வாகிகள் கைவண்டூர் செந்தில், யோகா, எஸ்.கே.குமார், கடம்பத்தூர் ஈசன், பூண்டி ராஜா மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், ஏகாட்டூர் ஆனந்தன், மதிமுக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பாபு தலைமை கழக பேச்சாளர் கனல் காசிநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'காந்தியைக் கொன்ற, காமராஜரைக் கொலை செய்ய முயன்ற பயங்கரவாத இயக்கமே ஆர்எஸ்எஸ்' - திருமாவளவன்