திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை, வேதலாபுரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி சுரேஷ்(26). இவர், வேலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் சசிகலா என்பவரைக் காதலித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 30 ஆம் தேதி அன்று காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் இவர்களின் திருமணத்திற்கு சசிகலாவின் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி அன்று சசிகலாவின் பெற்றோர்கள் சுரேஷிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்று விட்டுள்ளனர். இதனால், தன் காதல் மனைவியைப் பிரிந்த சுரேஷ் ஏக்கத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் வந்து திடீரென பைக்குள் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து சுரேஷ் தன் உடல் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முற்பட்டார். அப்பொழுது, அவர் தன் காதல் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். இதைக் கண்ட காவல்துறை விரைந்து செயல்பட்டு சுரேஷை தடுத்து நிறுத்தி அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.
தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு பின்னர், சுரேஷை கைது செய்து விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.